தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக, பைடனை தோல்வியடைய செய்ய ரஸ்யா சதி!! -அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை-
நடந்து முடிந்த அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலின் போது, டொனால்ட் டிரம்பிற்கு உதவுவதற்கும் ஜோ பைடனை தோல்வியடைய செய்யவும் அதிபர் புதின் முயற்சித்தார் என அமெரிக்க அரசின் உளவுத் துறை அறிக்கையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தலையீடு அமெரிக்க ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அதிகாரிகள் மற்றும் டிரம்பிற்கு நெருக்கமான மற்றவர்கள் மூலம் பிரசாரத்தில் பைடன் குறித்து தவறான தகவல்களை ரஸ்யா புகுத்த முயன்றது.
பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன்றுள்ளது. குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு இந்த விடயத்தில் முக்கிய பங்கு இருந்தது.
உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது உள்ள நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில், பைடனையும் சேர்க்க , டிரம்ப் ஆதரவாளர்கள் ரஸ்ய அரசின் உதவியுடன் திட்டமிட்டனர்.
அமெரிக்காவிற்குள் குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்குவதற்கான ரஸ்யாவின் முயற்சிகள் இது ஆகும்.
இருப்பினும் வாக்கு மொத்தத்தை மாற்றவோ அல்லது தேர்தல் உள்கட்டமைப்பைத் தாக்கவோ முயலவில்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.