மியான்மர் மக்களுக்கு தற்காலிக அடைக்கலம்!! -அமெரிக்கா அரசு அதிரடி முடிவு-
மியான்மரில் இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிர் சேதங்களுக்கு மத்தியிலும் அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் அந்த போராட்டங்களை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் முதல் இன்றுவரை நடைபெற்ற போராட்டத்தில் 70 மேற்பட்ட பொது மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் நாட்டு மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க தயராக இருப்பதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.
தீவிர ஆய்வுக்கு பின் “தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை” என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் அறிவித்துள்ளார்.