SuperTopAds

வீட்டுக்கொரு கைத்தொழில் திட்டத்தின் கீழ் கைத்தறி உற்பத்தி நிலையம் திறப்பு

ஆசிரியர் - Editor III
வீட்டுக்கொரு கைத்தொழில் திட்டத்தின் கீழ் கைத்தறி உற்பத்தி நிலையம் திறப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அணுசரனையில் கிராமிய தொழில்துறை திணைக்களம் இணைந்து வீட்டுக்கொரு கைத்தொழில் திட்டத்தின் கீழ் சொறிக்கல்முனை கோழிகுறோஸ் கன்னியர் மடம் முயற்சியின் பலனாக கைத்தறி உற்பத்தி நிலையம் ஒன்று திறந்து இன்று வைக்கப்பட்டது.

இக்கைத்தறி உற்பத்தி நிலையத்தில் சுமார் 15 பெண் தலைமைத்துவ மற்றும் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது வருமானத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

6 கைத்தறியும் அதற்குரிய உபகரணங்களையும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உதவியுடன் வழங்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கிராமிய தொழில்துறை திணைக்கள கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் கமால் நெத்மினி அருட்சகோதரர் லெஸ்லி ஜெயகாந்தன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அமிர்தசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு  திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிலையத்தை சொறிக்கல்முனை கோழிக்குறோஸ் கன்னியர் மடம் மேற்பார்வை செய்வதுடன் உற்பத்தி பொருட்களையும் சந்தைப்படுத்துவதற்கான வழிவகைகளையும் மேற்கொள்ளவுள்ளது.

கடந்த யுத்தம் காரணமாக 1990 ம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் அரச பயிற்சி நிலையம் ஒன்று இயங்கி வந்திருந்ததுடன் பின்னர் யுத்தம் தீவிரம் அடைந்தமை காரணமாக இடம்பெயர்வு ஏற்பட்ட பின்னர் முற்றாக மூடப்பட்டிருந்தது.பின்னர் தற்போது 2021 ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.