மியன்மார் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முழுமையாக முடக்கம்!!
மியன்மார் நாட்டின் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கமான டாட்மேடவ் முகப்புத்தகம் வரையறைகளை மீறிய குற்றச்சாட்டில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு நடைபெறும் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக கடந்த 20 நாட்களாக மியன்மாரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது.
மேலும் அங்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. இராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முகப்புத்தகத் தளம் மியன்மார் நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இயங்கி வருகிறது. போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை முகப்புத்தகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தின் உச்சகட்டமாக கலவரத்தில் ஈடுபட்ட இரு போராட்டக்காரர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தப் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், மியன்மார் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கமான டாட்மேடவ், முகப்புத்தக வரையறையை மீறிய குற்றச்சாட்டிற்காக முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.