முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடகிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது
முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடகிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கல்முனையில் அமைந்துள்ள மத்திய குழு காரியாலயத்தில் இன்று(14) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
அரசாங்கத்தின் மீதான சிறுபான்மையினரின் தவறான புரிதல் காரணமாக தான் திரு சாணக்கியனுக்கு பின்னால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்கு சகல தரப்பினரும் ஆதரவளித்திருப்பது என்பது மிக வெட்டவெளிச்சமான உண்மையாகும்.இதில் தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லீம் மக்கள் போராட்டத்தை நடாத்துகின்ற போது சிறுபான்மை சமூகத்தினையே ஒற்றுமை இடம்பெற்றதாக சிலர் விமர்சனத்தை எழுப்புகின்றார்கள்.இங்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் இருவரும் இப்பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்தார்கள்.உண்மையில் இப்பேரணியின் பின்னணி என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் அரசியல் வங்குரோத்து நிலைமையினை சீர்செய்வதற்காக இந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லீம்களையும் தமிழர்களையும் சீண்டி விட்டிருக்கின்றார்கள் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.இப்பேரணியினால் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகம் எவ்வித நன்மைகளையும் அடையவில்லை என்பதே எமது கருத்தாகும்.
இப்பேரணியானது தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்த செல்வாக்கினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாடகமாகவே பார்க்கின்றோம்.இப்போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை இறுதிநாளில் விரிசல் ஏற்பட்டு இரு பிரிவினராக செயற்பட்ட சம்பவம் அங்கு பதிவாகியுள்ளது.முஸ்லீம் தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை.அத்துடன் புதிய அரசியல் சீர்திருத்தத்திற்காக அரசாங்கம் கேட்டுக்கொண்ட ஆலோசனைகளை இதுவரை முஸ்லீம்களை பிரதிநிதித்துவ படுத்துகின்ற கட்சிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.அதே போன்று தமிழ் கட்சிகளை சார்ந்தோர் ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் இப்பேரணியில் வடகிழக்கு இணைய வேண்டும் என கூறியே ஆரம்பித்திருந்தார்கள்.அந்தவகையில் முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடகிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது.
இப்பேரணியில் முஸ்லீம்கள் ஜனாசா அடக்க விடயம் தொடர்பில் இணைந்து தமிழ் தலைவர்களுடன் செயற்பட்டிருந்தார்கள்.முஸ்லீம்களின் பிரதேசங்களிற்கு பேரணி வருகின்ற போது சகல தரப்பினரும் ஜனாசாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியதை காண முடிந்தது.முஸ்லீம்களின் தலைநகரமான கல்முனையை பேரணியில் கலந்த கொண்டவர்கள் ஊடறுத்து செல்லும் போது பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோஷங்களை மிக பிரதானமாக எழுப்பியதை காண முடிந்தது.
ஒரு கல்முனை பிரதேச செயலகத்தில் ஒன்றாக இருக்க முடியாது உள்ள நிலையில் இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எவ்வாறு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகின்றேன்.இதில் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் சாணக்கியன் சுமந்திரன் சிவில் சமூகத்தை சார்ந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க மன்னாரில் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அறிக்கை வெளியாகிய போது அங்கு இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கமாகவே எதிர்த்தார். அவ்வாறு இருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் வங்குரோத்து நிலைமையினை சரிசெய்து கொள்வதற்காக ஏற்பாடு செய்த இப்பேரணியினால் முஸ்லீம் சமூகம் அடைந்த நன்மையோ தமிழ் சமூகம் அடைந்த நன்மையோ எதுவும் இல்லை.
பேரணியின் இறுதி நாளில் என்ன நடந்தது.இரு தரப்பினரிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றிருந்தது.இப்பேரணிக்கு முஸ்லீம்களை வெளிப்படையாக ஆதரவு தாருங்கள் என தமிழ் தரப்பினர் அழைக்கவில்லை.தனிமைப்படுத்தப்பட்டுள்ள முஸ்லீம் தலைவர்களின் செல்வாக்கினை உயர்த்தி கொள்வதற்காகவும் முஸ்லீம்களை திசைதிருப்பியதான ஒரு நாடகமாகவே இப்பேரணியை பார்க்கின்றோம்.ஜனாசா விடயத்தில் தாங்கள் பேசியதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.இவர்கள் கூறியோ அல்லது வேறு அதிர்வலைகளாலோ அரசாங்கம் ஜனாசா தொடர்பில் நிலைப்பாட்டிற்கு வரவில்லை.குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியானது அரசாங்கத்திற்கு எவ்வித அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை.இது தவிர யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவகத்தை நிர்மாணிக்க கோரி தமிழ் முஸ்லீம் கட்சிகள் தத்தமது மக்களிடையே கர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கேட்டிருந்தார்கள்.
ஆனால் அந்த அழைப்புக்கு கூட தமிழ் முஸ்லீம் மக்கள் பெரும்பாலும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.காரணம் சிறுபான்மை கட்சிகளிடையே மக்களுக்கு இருக்கின்ற அதிருப்தி நிலையாகும். இதற்கு தங்களது பிரதிநிதித்தவ அரசியலுக்காக செயற்படுகின்ற தமிழ் முஸ்லீம் கட்சிகள் தொடரச்சியாக அரசாங்கத்திற்கு எதிரான போக்குகளை கொண்டிருப்பதும் ஒரு காரணமாகும்.கடந்த காலங்களை போன்று போராட்டங்களில் இப்பொழுது தமிழ் முஸ்லீம் ஆர்வம் காட்டுவதில்லை என்று தான் கூற வேண்டும்.ஏனெனில் அரசாங்கத்தை தொடர்ந்து எதிர்ப்பதனால் உரிமைகள் உத்தரவாதம் இல்லாத சவால் மிக்க நிலைமையை உருவாக்கி விடும் என்ற நிலைமையில் உள்ளார்கள்.இவ்வாறான அரசியல் நிலைமைகளை மக்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார்.