தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு 11 பேர் போட்டி
தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
குறித்த உப வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை கடந்த செவ்வாய்க்கிழமை(09) பி.ப 3.00 மணிக்கும் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய 7 பேராசிரியர்களும் 4 கலாநிதிகளும் என 11 பேர் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆறு வருடங்கள் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், மீண்டும் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு மேலதிகமாக தென் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுல்லா பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம், தென் கிழக்கு பல்கலைக்கழக கணக்கீட்டு பேராசிரியர் ஏ.எல். அப்துர் ரவூப், அதே பல்கலைக்கழக முகாமைத்துவ பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப் ஆகியோரும் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அத்துடன் தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பேராசிரியர் எம்.பீ.எம். இஸ்மாயில், அதே பல்கலைக்கழக இயந்திரவியல் பொறியியல் பேராசிரியர் ஏ.எம். முஸாதீக், கொழும்பு பல்கலைக்கழக நிதிப் போராசிரியர் ஏ.ஏ.அஸீஸ், மலேசியவிலுள்ள மலாயா பல்கலைக்கத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி ஆகியோரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த மாத நடுப் பகுதியில் இடம்பெறும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.