SuperTopAds

ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும்!! -இராணுவத்தை வலியுறுத்தும் ஐ.நா-

ஆசிரியர் - Editor II
ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும்!! -இராணுவத்தை வலியுறுத்தும் ஐ.நா-

மியான்மரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

அந்நாட்டில் இராணுவம் அண்மையில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை கைது செய்த இராணுவம் அவர்களை சிறை அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில் அங்கு இப்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து ஒரு வருடம் நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மியான்மர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

இது குறித்து பேசிய ஐ.நா. தலைவர் அண்டோனியோ குட்டாரெஸ், தற்போது மியான்மரில் நிலவி வரும் சூழ்நிலை கவலையளிப்பதாக தெரிவித்தார். ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டும் எனவும் அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.