இறப்பதாக கூறிய முஸ்லீம் பெண் வியாபாரியை ஆறுதல்படுத்திய மாநகர சபை உறுப்பினர்
கல்முனை மாநகர சபையின் தற்காலிக அனுமதியில் இயங்கிய வீதியோர சந்தைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த கொரோனா அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு சந்தைப்பகுதியை அண்டிய வீதியோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் உரிய வரியினை செலுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் இன்று(30) குறித்த இடத்திற்கு சென்ற கல்முனை மாநகர சபை அதிகாரிகள் நாளை (30) முதல் குறித்த பகுதிகளில் இருந்து தற்காலிக வியாபாரங்களை அகற்றுமாறும் வீதியோர போக்குவரத்து மற்றும் சில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டு சென்றிருந்தனர்.
இதனால் நிர்க்கதியான குறித்த வியாபாரிகள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை அழைத்து முறைப்பாடு செய்ததுடன் இவ்விடயத்தில் தலையிட்டு தீர்வு ஒன்றினை பெற்றுத்தர வேண்டும் என கோரினர்.
இதனை தொடர்ந்து மாநகர சபை உறுப்பினரும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாகவும் குறித்த இடத்தில் எவ்வித நடைபாதைகள் வீதி போக்குவரத்திற்கு இடைஞல் இன்றி வியாபாரத்தை தொடருமாறு வியாபாரிகளை கேட்டுள்ளார்.
மேலும் சில தரப்பினரின் காழ்ப்புணர்ச்சியினால் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபையினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் இதற்கு மிக விரைவில் முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.
குறித்த இடத்தில் இருந்து தன்னை அகற்றினால் அவ்விடத்தில் தான் இறப்பதாக முஸ்லீம் பெண் வியாபாரி அழுது தெரிவித்த நிலையில் மாநகர சபை உறுப்பினர் ஆறுதல் வார்த்தை கூறி வியாபாரத்தை தொடருமாறு கூறினார்.