வீடற்ற வறிய ஏழை குடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது
வீடற்ற வறிய ஏழை குடும்பம் ஒன்றிற்கு பல இலட்சம் பெறுமதியான வீடு ஒன்றினை கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் அணுசரனையில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வெளிநாட்டில் உள்ள சுவிசில் வசிக்கும் விஜியகுமாரன்(விஜி) தம்பதியினர் தமது பிள்ளைகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் சேனையின் மனித நேயப்பணிகளில் ஒன்றாகிய இல்லம் அமைத்து கொடுத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஊடாக இவ்வீடமைப்பிற்காக நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.
மேலும் குறித்த வீடு அமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய இன்று(28) மதியம் கல்முனை பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டார்.
இதன் போது அங்கு கருத்து தெரிவித்த அவர்
மனிதனின் அடிப்படை பிரச்சினைகளான வீடு உடை உணவு என்பன உள்ளன.அத்தடன் தற்போது கல்வியும் அத்தியவசியமாக நாம் நோக்க வேண்டும்.நிலையான அபிவிருத்தியை நோக்கி சமூகம் நகர்வதற்கு காலத்தின் தேவையாக கல்வி உள்ளதை நாம் அறிந்து அதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்.மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கு அப்பால் எம்மை நாம் சவாலுக்கு உட்படுத்தி எமது பகுதி வாழ் மக்களின் அபிவிருத்தியில் கை கொடுக்க அர்ப்பணிப்புகளை மேற்கொள்வோம் என்றார்.
இந்நிகழ்வில் தேற்றாத்தீவு பங்குத்தந்தை நிர்மல் சூசை ராஜ் ,கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் ந.சங்கீத் அதன் அங்கத்தவர்கள் உட்பட பரோபகாரரின் உறவினர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.இறுதியாக புதிய வீட்டின் முன்னால் மாமரம் ஒன்றினை மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கல்முனை பிராந்திய இளைஞர் சேனை தலைவர் ஆகியோர் இணைந்து நட்டு வைத்தனர்.
மேலும் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையானது அண்மைக்காலமாக வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கொரோனா அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.