கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடி இறக்கப்பட்டது
கல்முனை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகையின் 199வது கொடியேற்ற நிகழ்வு 12 நாட்களின் பின்னர் இறுதி நாளான இன்றைய தினம் (26) புனித கொடி பக்கீர் ஜமாஆத்தினரின் சலவாத்துடன் இறக்கி வைக்கப்பட்டது.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந் நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நானிலம் போற்றும் நாஹூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் வருடா வருடம் நடாத்தப்படும் கடற்கரை பள்ளிவாசலில் 199 வது வருட புனித கொடியேற்று விழாவின் கொடி ஏற்றும் நிகழ்வு வரலாறு காணாதவகையில் 30 பேர் அளவில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மிக எளிமையான முறையில் கடந்த வியாழக்கிழமை (14) மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து மௌலீத் ஓதலுடன் ஏழு அடுக்கு மனோராவில் கொடி ஏற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.