கல்முனை சந்தையில் சுகாதாரத்தை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை; வியாபாரஸ்தலமும் மூடப்படும்; சுகாதாரத்துறை எச்சரிக்கை
கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தலா 3,000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்டவர்களின் வியாபாரஸ்தலம் மூடப்படும் எனவும் சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 நாட்களின் பின்னர், கல்முனை நகரம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, கல்முனை மாநகர பொதுச் சந்தையை கொவிட் தடுப்பு சுகாதார விதிமுறைகளுடன் இயங்கச் செய்வது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று ஆசாத் பிளாசா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், பொறியியலாளர் ஏ.எச்.ஏ.ஹலீம் ஜௌஸி, பொதுச் சந்தை மேற்பார்வையாளர் ஏ.எல்.எம்.இன்ஷாட் மற்றும் வர்த்தக சங்க முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சந்தையின் உட்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு, சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டு, அவற்றுக்கான ஒழுங்குகள் குறித்து வர்த்தகர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அவ்வாறே சந்தையின் வெளிப்பகுதியில் வியாபாரங்களை மேற்கொள்வது தொடர்பிலும் வாகனத் தரிப்பிட ஒழுங்குகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சந்தை வியாபாரிகள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து, சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுடன் மீண்டுமொரு தனிமைப்படுத்தல் சூழ்நிலை உருவாக இடமளித்து விடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
சுகாதார விதிமுறைகளையும் சந்தை ஒழுங்கு விதிகளையும் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இதன்போது வர்த்தகர்களினால் உறுதியளிக்கப்பட்டது.
இவற்றைக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளது.