SuperTopAds

1,207 அடி ஆழத்தில் 14 நாட்கள் சிக்கியிருந்த 11 சுரங்க பணியாளர்கள் உயிருடன் மீட்பு!!

ஆசிரியர் - Editor II
1,207 அடி ஆழத்தில் 14 நாட்கள் சிக்கியிருந்த 11 சுரங்க பணியாளர்கள் உயிருடன் மீட்பு!!

சீனாவில் தங்க சுரங்கத்தில் நடந்த வெடி விபத்தையடுத்து நிலத்திற்கு அடியில் 1,207 அடியில் கடந்த 14 நாட்களாக சிக்கித் தவித்த 11 தொழிலாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிருடன் மீட்கப்பட்டனர்.

அந்நாட்டின் சாந்தோம் மாகாணத்தில் யாண்டைன் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கடந்த 10 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 22 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 12 தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது கடந்த 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும்பணியை துரிதப்படுத்திய மீட்பு குழுவினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 பேரை உயிருடன் மீட்டு பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். 

மீட்கப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஆரோக்கியமாக உள்ளதாக சுரங்க மீட்புக்கான தலைமை பொறியாளர் சியாவோ வென்ரு இன்று தெரிவித்துள்ளார். 

குறித்த தொழிலாளர்கள் நிலத்துக்கடியில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்ட உடன் அவர்களுக்கு தேவையான மருந்துகள், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் துழையிட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனாலேயே அவர்களில் பலர் உயிர் பிழைக்கக் காரணமாக இருந்தது. மீட்புப் பணியில் 600 மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.