ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு தாக்குதல் எச்சரிக்கை!! -பாராளுமன்றுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு: வாசிங்டனில் அவசர நிலை பிரகடணம்-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியா ஜோ பைடன் நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ளதால், தலைநகரம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது. அப்போது பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஜோ பைடனின் பதவியேற்பு விழாவும் பாராளுமன்ற கட்டிடத்தில் தான் நடைபெற உள்ளது. ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் பாராளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது, பாராளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் தலைநகர் வாசிங்டன் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாசிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.