கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட சாய்ந்தமருது நபரின் ஜனாஸா 25 நாட்களின் பின்னர் நீதிமன்ற உத்தரவில் குடும்பத்தினரிடம் கையளிப்பு

ஆசிரியர் - Editor III
கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட சாய்ந்தமருது நபரின் ஜனாஸா 25 நாட்களின் பின்னர் நீதிமன்ற உத்தரவில் குடும்பத்தினரிடம் கையளிப்பு

கடந்த 2020-12-21ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் ஜனாஸா, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து, அவரது ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், கடந்த 25 நாட்களாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, அவரது பி.சி.ஆர்.அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் பிரகாரம் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடக்கோரி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த அதேவேளை வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் அவரால் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2021-01-08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த 2020-12-21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர் சிறிது நேரத்தில் மரணித்திருந்தார். அதேவேளை, அவரது மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையானது மட்டக்களப்பிலுள்ள விசேட தொற்று நோயியல் நிபுணரால் வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறு அவரது குடும்பத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதிலும் அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் கடந்த 05ஆம் திகதி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீபை நேரடியாக சந்தித்து, இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அவர் அந்த ஜனாஸாவை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு, சட்டத்தரணி என்ற ரீதியில், கோரிக்கை கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) ஒன்றை அன்றைய தினமே அவசரமாக கையளித்திருந்தார். எனினும் ஜனாஸா விடுவிக்கப்படவில்லை.

இதையடுத்து, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபினால் முறைப்பாட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அது அன்றைய தினமே நீதவான் ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகளின் வாதத்தில் திருப்தியுற்ற நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஏற்றுக்கொண்டது.

அத்துடன் குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08ஆம் திகதி பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆவணத்தை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தியதுடன் இந்த ஆவணத்தை மையப்படுத்தி 2021-01-11ஆம் திகதி  வழக்கை ஆதரிப்புக்காக எடுக்குமாறு பணித்திருந்தது.

அன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திடீர் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை கோரப்பட்டு, 2021-01-13ஆம் திகதிக்கு அவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையை மையப்படுத்தி, சில அறிவுறுத்தல்களை வழங்கிய நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. இதனிடையே 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் சட்டத்தரணி றகீபினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குறித்த நபரின் மரணமானது சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் சம்பவித்துள்ளது என வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அன்றைய தினம் ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கையளிக்கப்பட்ட ஜனாஸா சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இம்மனு சார்பில் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகி, முக்கிய பங்காற்றியிருந்தனர்.

Radio