அம்பாறையில் ஹர்த்தால் பிசுபிசிப்பு-மக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபாடு
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் திங்கட்கிழமை(11) ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள் ,சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள் , பாமசிகள், வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.
எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹர்த்தால் அனுஸ்டிப்பானது யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைத்துத்தர வேண்டும் என திங்கட்கிழமை (11) வட கிழக்கு பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.