கல்முனை பிரதேச மக்கள் 4 ஆவது நாளாகவும் தங்களை சுயதனிமைப்படுத்தி கொண்ட நிலை
கல்முனை பிரதேச மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் 4 ஆவது நாள் கடந்துள்ளது.
கொரோனா பரம்பல் கல்முனை மாநகர எல்லையில் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து கடந்த ஜனவரி 2 ஆம் திகதி முதல் கல்முனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை செய்லான் வீதி முதல் சாஹிரா கல்லூரி வீதி வரை மாலை 6.00 மணியில் இருந்து தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக இப் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும் வீதி போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
கல்முனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியில் சகல பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் உலமாக்கள் மக்கள் பிரதிநிதிகள் வர்த்தக சங்க பிரதி நிதிகள் சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுகாதாரத் துறை பிரதிநிதிகள் கல்விமான்கள் ஒன்றிணைந்து இச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது
தீவிரமாக பரவி வரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் இச்செயலணியானது கடந்த சனிக்கிழமை(2) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் சாஹிறா கல்லூரி வீதி வரையிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் தினமும் மறு அறிவித்தல் வரை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடப்படல் வேண்டும் எனவும் அத்துடன் அக்காலப்பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படுவதுடன் அவசர வைத்தியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.