கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவில் கொவிட் -19 நிலைவரம்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொவிட்-19 தொற்று தொடர்பான பிந்திய கள நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இதனை கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜீ. சுகுணன் இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி இன்று (06) காலை 10.00 மணி வரையான நிலைவரப் பட்டியல் வெளியாகியுள்ளன.
மேலும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 9 நாளான இன்று(6) குறித்த பிரதேச வீதிகள் சில வெறிச்சோடி காணப்படுவதுடன் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு கடந்த (28) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகள் பிரதான வீதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த பகுதியை ஊடறுத்து செல்கின்ற பிரதான வீதி தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் பின்னர் குறித்த பிரதான வீதியில் இடப்பட்ட வீதி தடைகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன.
அடுத்து 41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்று(6) முதல் விடுவிக்கப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் சகல பிரதேசங்களும் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3 உம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை-08 பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1 ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த 09 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.