22 வருடங்களாக இயங்கிய கல்வி நிலையத்தை பிடுங்கி எறிந்து வன்முறை கும்பல் அட்டகாசம்..! நடவடிக்கை எடுக்காமல் எடுபிடி வேலை பார்க்கும் பொலிஸார்...
கோப்பு படம்
வவுனியா - வைரவப்புளிங்குளம் பகுதியில் 22 வருடங்களாக இயங்கிவந்த தனியார் கல்வி நிலையம் அரசியல் பின்னணியில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் பிடுங்கி வீசப்பட்டுள்ளது.
வைரவப்புளியங்குளம் வீதியில் வீனஸ் கல்லூரி என்னும் தனியார் கல்வி நிலையம் 22 ஆண்டுகளாக அதே இடத்தில் இயங்குகின்றது. இவ்வாறு கல்வி நிலையம் இயங்கும் காணி குமாரசாமி என்பவரால் கல்வி நிலைய உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாதம் 15 ஆயிரம் ரூபா தற்போது வாடகை வழங்கப்படும் இக் காணி 8 பரப்பைக் கொண்டது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு நில உரிமையாளரிடம் கல்வி நிலைய உரிமையாளரிற்கு இடையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் நேற்றைய தினம் காணி உரிமையாளரும் அல்லாத மூன்றாம் நபர் சிலருடன் இணைந்து அடாத்தாக இந்த கல்வி நிலையத்தை முழுமையாக பிடுங்கி எறிந்து உடமைகளையும் தூக்கி வீசியுள்ளார்.
இருந்தபோதும் காணி உரிமையாளரதோ அல்லது கல்வி நிலைய உரிமையாளரது இழப்புத் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிசார்
சம்பவ இடத்திற்கு வந்து வன்னி மாவட்டத்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சாரதி, உதவியாளர்களின் கதையை கேட்டு கல்வி நிலைய வளாகத்தையே பூட்டிச் சென்றுள்ளனர்.
இந்த கல்வி நிலையத்திற்கான மின்சாரப் பட்டியல் கல்வி நிலைய உரிமையாளர் பெயரிலும், சோலை வரி நில உரிமையாளர் பெயரிலும் உண்டு.
கல்வி நிலைய உரிமையாளரது கணவர் 2006ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோதும் பெரும் சிரமத்தின் மத்தியில் தனது மூன்று பிள்ளைகளை வளர்க்கும் ஓர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.