கறுப்பினத்தவர் என்பதால் புறக்கணிப்பு!! -கண்ணீருடன் காணொளி வெளியிட்ட அமெரிக்க மருத்துவர் மரணம்-
தான் கறுப்பினத்தவர் என்பதால் தனக்கு உரிய வகையில் கொரோனா சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
அந்நாட்டின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த சூசன் மோர் என்கிற இந்தப் பெண் மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்தியானா பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தான் ஒரு கறுப்பினப் பெண் என்பதால் தனக்கு முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என, சூசன் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரைக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சூசன் மோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வேறு ஒரு உள்ளூர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
சூசன் மோர் கடந்த 4 ஆம் திகதி முகப்புத்தகத்தில் ஒரு காணொளி வெளியிட்டார். தனக்கு சிகிச்சையளித்தது ஒரு வெள்ளை இன மருத்துவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சூசன் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டே கண்ணீருடன் இந்த காணொளிப் பதிவைப் பதிவு செய்திருந்தார்.
என் நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்று அந்த மருத்துவர் பார்க்கவில்லை. எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர், என்னைத் தொடவே இல்லை. என் உடலை பரிசோதிக்கவில்லை எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி சூசனுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவாசிக்க முடியாமல், இரத்த வாந்தி எடுத்த படி, தீவிர காய்ச்சலுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தான் ஒரு மருத்துவராக இருந்த போதும், தனக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெற போராட வேண்டி இருந்தது என சூசன் கூறினார்.
தனக்கு அன்டி வைரஸ் மருந்தான ரெம்டிசிவிர் கொடுக்குமாறு சிகிச்சை அளித்தவர்களிடம் மன்றாட வேண்டி இருந்தது. தன் மார்புப் பகுதியை ஸ்கான் செய்யவும் இதே போல கெஞ்ச வேண்டி இருந்தது என சூசன் குறிப்பிட்டிருக்கிறார்.
நான் வலியில் துடித்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ போதை பொருளுக்கு அடிமையானவள் போல, எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்னை உணர வைத்தார். நான் ஒரு மருத்துவர் என்பது அவருக்குத் தெரியும். இருந்தும் புறக்கணிக்கப்பட்டேன். இப்படித் தான் கறுப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள் என தன் முகப்புத்தக காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இண்டியானாபொலிஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இருந்து, வேறு ஏதாவது வைத்தியசாலைக்கு தன்னை மாற்றுமாறு, மருத்துவ வழக்கறிஞர் மூலம் கோரிக்கை வைத்தார். வைத்தியசாலையில் இருந்த வெளியேறினாலும், இரத்த அழுத்தம் மற்றும் தீவிர காய்ச்சலால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை அமெரிக்காவில் நிலவும் நிறவெறி மற்றும் இன ரீதியான பாகுபாடுகள் குறித்த மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.