SuperTopAds

ஏழைகளுக்கு உதவி அன்பை வெளிப்படுத்துவோம்!! -போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து-

ஆசிரியர் - Editor II
ஏழைகளுக்கு உதவி அன்பை வெளிப்படுத்துவோம்!! -போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து-

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார். 

இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

வேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். 

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார்.