கிறிஸ்மஸ் தினத்தில் கொரோனா பலி 15,000 ஆக உயருமென எச்சரிக்கை!!
கனடாவில் கிறிஸ்மஸ் தினத்தன்று கொரோனா மரணங்கள் 14,920 ஆக உயரலாம் என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மத்திய அரசின் புதிய மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா தொற்று தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள சில மாகாணங்களில் அண்மையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகளை நிரம்பி வருவதாக தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் தெரசா டாம் தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா தொற்று நோய் தொடர்பான புதிய கணிப்பீடுகளை துணை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் நூவுடன் இணைந்து அவர் வெளியிட்டார்.
கடந்த 7 நாட்களாக கனடாவில் தினசரி சராசரியாக 6,500 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால் ஜனவரி மாதத்திற்குள் தினசரி தொற்று நோயாளர் தொகை10,000 என்ற அளவுக்கு உயரும் என கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.