அம்பாறையில் அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை மும்முரம்
அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி அதிகார சபையின் சிரமதான நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையிலும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக சம்மாந்துறை ,கல்முனை, நற்பிட்டிமுனை ,சவளக்கடை ,நாவிதன்வெளி ,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதியோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.
அத்துடன் கிட்டங்கி தாம்போதியில் இரு மருங்கிலும் உள்ள பாதுகாப்பு தூண்களுக்கு வெள்ளை நிற பூசுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இப்பகுதியில் இடம்பெற்ற விபத்தினை அடிப்படையாக கொண்டு இவ்வாறான சிரமதான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்களின் பாதுகாப்புக்கருதி குறித்த வேலைத்திட்டத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதிகளை சுத்தப்படுத்துவதுடன் வீதி போக்குவரத்திற்கு தடையாக உள்ள பாரிய மர கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள பொது நிறுவனங்கள் மக்கள் கூடும் இடங்கள் வங்கிகள் உட்பட மக்களின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தல்கள் பலகைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடப்பட்டுள்ளது.
இது தவிர நாவிதன்வெளி கல்முனை பகுதியில் உள்ள வீதியோரங்களில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்ப்டுள்ளது.