ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள்: முதல் இடத்தில் பாகிஸ்தான்!! -20 வருடத்தில் 140 கொலைகள்-
ஊடகவியலாளர்களுக்கு அதிக ஆபத்தான நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக சுதந்திரத்துக்கான வலையமைப்பு எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இங்கு 140 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வேறு எந்தப் பகுதியையும் விட சிந்த் மாகாணம் ஊடகவியலாளர்களுக்கு 3 மடங்கு ஆபத்து நிறைந்த பகுதியாக உள்ளது.
பாகிஸ்தானில் இணைய வழி குற்றங்கள் மற்றும் அவதூறு சட்டங்களின் கீழ் ஊடகவியலாளர்கள் மீது அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
அரசுக்கு எதிராக செயற்படுதல் அல்லது அரசின் கீர்த்திக்குப் பங்கம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டுக்களும் பொதுவாக ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்படுகின்றன.
இதேவேளை, பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி கிடைக்காத போக்கும் தொடர்வதாக சுதந்திர வலைமைப்பு தெரிவித்துள்ளது.
33 ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக விசாரணைகளில் சிறயளவு முன்னேற்றம் கூட இல்லை எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.