நடுகடலில் மூழ்கிய அகதிகள் கப்பல்!! -74 பேர் பலி: 47 பேர் உயிருடன் மீட்பு-
ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று லிபியா கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மூழ்கியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் குறைந்தது 74 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதாகவும், கடலில் மூழ்கிய 47 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக இருந்து வருகிறது.
இந்த வழியில் கடல் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 900 பேர் இந்த ஆண்டு இது வரை உயிரிழந்துள்ளனர் எனவும் ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 11,000 பேர் கைது செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், துஸ்பிரயோகங்களையும் எதிர்கொண்டு வருவதாக ஐ.ஓ.எம். கூறியுள்ளது.
புதன்கிழமை இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள லிபிய கடலோர நகரமான சப்ரதாவில் அகதிகள் படகொன்று கவிழ்ந்து ஐந்து பேர் இறந்தனர். அதிலிருந்த 100 பேர் மீட்கப்பட்டனர்.
மேற்கு ஆபிரிக்க கரையிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயன்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் செனகல் கடல் பிராந்தியத்தில் மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.