தோல்வியை ட்ரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடு!! -சாடும் ஜோ பைடன்-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுப்பது வெட்கக்கேடானது என தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் எப்படி முயன்றாலும் ஆட்சி மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 290 தேர்தல் சபை வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். 214 வாக்குகள் மட்டுமே பெற்று ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பைடன், தேர்தல் தோல்வியை ஏற்க ட்ரம்ப் மறுப்பது வெட்கக் கேடானது என்றார்.
ட்ரம்ப் எவ்வாறு முயன்றாலும் அமெரிக்காவில் அதிகார மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. வெள்ளை மாளிகைக்குள் செல்வதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அமைச்சரவையை அமைக்கும் பணிகளையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம் எனவும் பைடன் கூறினார்.