தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே ஆதரவு
தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சகல உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
இன்று (10) காரைதீவு பிரதேச சபையின் 33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் சமர்ப்பித்திருந்த நிலையில் சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு - செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் பின்வருமாறு தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் (தவிசாளர்)-காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவு திட்டமானது மக்களுக்காக தயாரிக்கப்பட்டது.வெறுமனே அரசியல் வாதிகளுக்காக அல்லது அரசியலுக்கு தயாரிக்கப்பட்டது அல்ல.மக்களின் அபிவிருத்தியை நோக்கி உருவாக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்தை சகல உறுப்பினர்களும் ஆதரித்து இலங்கையில் சிறந்த ஒரு வரவு செலவு திட்டமாக உருவாக்கியுள்ளனர்.இந்த வரவு செலவு திட்டத்தை ஏகமனதாக நிறைவேற்ற ஆதரவு வழங்கிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
எம்.எச்.எம். இஸ்மாயில் (ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்)
2021 ஆம் ஆண்டிற்கான எமது சபையின் வரவு செலவு திட்டமானது கடும் சவாலுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.சகல கட்சி உறுப்பினர்களிடையே போட்டிகள் இருந்த போதிலும் முரண்பாடுகளின்றி இறுதி நேரத்தில் தவிசாளரின் சாணக்கிய முடிவின் காரணமாக சபையில் உள்ள அனைத்து கட்சி 12 உறுப்பினர்களும் ஏகமனதாக வரவு செவு திட்டத்தை அங்கீகரித்து வெற்றி பெற வைத்தனர்
எஸ்.சசிக்குமார் (காரைதீவு சுயேட்சை குழு உறுப்பினர்)
2021 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரு சமூகத்திற்கிடையிலான வெற்றியாவே நாம் பார்க்கின்றோம்.ஏனெனில் தவிசாளரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்காகவே ஆதரவளித்தோம் .
ஏ.எம். ஜாஹீர் (காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர்-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி)
இந்த வரவு செவு திட்டமானது வெற்றி பெற அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு அளித்துள்ளனர்.இந்த காரைதீவு பகுதியில் இரு சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே நாம் ஒன்றிணைந்து இவ்வரவு செலவு திட்டத்தை வெற்றி பெற வைத்துள்ளோம்.இதனூடாக மக்களுக்கு எமது சேவைகளை மென்மேலும் செய்யவுள்ளோம்.
ஏ.எம் ரணிஸ்(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்)
எமது சபையின் வரவு செலவு திட்டமானது 12 அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது சபையானது காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு சமூகங்களும் சேர்ந்து பயணிக்கின்ற சபையாகும்.மக்களின் அபிவிருத்தியை நோக்கி இந்த சபையின் உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள்.காரைதீவு பிரதேச சபையானது ஒற்றுமையுடன் பயணிக்கும் என நம்புகின்றோம்.
எம்.ஜலில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்)
எதிர்காலத்தில் எமது மக்களுக்கான அபிவிருத்தியை கொண்டு செல்வதற்காக தவிசாளரின் கரங்களை பலப்படுத்தி இன்று வரவு செலவு திட்டத்திற்கு 12 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.இதற்காகவே ஒற்றுமையுடன் நாமும் வாக்களித்துள்ளோம்
எஸ்.ஜெயராணி( தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் சபையை ஆள இரு சமூகத்தை சேர்ந்த 12 உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளார்கள்.அதனை நான் வரவேற்கின்றேன்.
ரி.மோகனதாஸ் (தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்)
ஒற்றுமையுடன் சகல உறுப்பினர்களும் காரைதீவு பிரதேச சபையினை மக்களின் அபிவிருத்திக்காக மீண்டும் ஆட்சியை எமது கட்சிக்கு வழங்கியுள்ளனர்.இதற்காக நான் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
கே.குமாரசிறி (காரைதீவு சுயேட்சை குழு உறுப்பினர்)
மக்களின் நலனுக்காக காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தினை தவிசாளரின் செயற்பாட்டினால் வெற்றி பெற வைத்துள்ளோம்.தவிசாளர் வெளிப்படையற்ற தன்மை காரணமாகவே நாம் கடந்த காலங்களில் கருத்து முரண்பாட்டில் இருந்தோம்.பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் சில விடயங்களை தவிசாளர் செய்ய முற்பட்டதனால் மாற்றத்தை கொண்டு வர தீர்மானித்தோம்.இருந்த போதிலும் எமது கருத்திற்கு தவிசாளர் மதிப்பளித்தமையினால் வரவு செலவு திட்டத்திற்கு மக்களின் நலன்கருதி வாக்களித்தோம்.
கே.ஜெயதாசன் (சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்)
மக்களின் நலன் கருதி ஏகமனதாக வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளித்தோம்.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் 12 பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 02 , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -02, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -01, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -4 ,தோடம்பழம் சுயேட்சை குழு -01 , காரைதீவு சுயேட்சை குழு 2 , என சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.