ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகை செய்த ஜனாதிபதிக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக நன்றி
எமது உணர்விற்கு மதிப்பளித்து ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகை செய்த ஜனாதிபதிக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 வது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(10) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது
எமது சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இறக்கின்ற எமது சகோதர சகோதரிகளின் ஜனாசாக்கள் (பிரேதங்கள்) நல்லடக்கம் செய்யும் வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு கொண்டு சென்று ஜனாதிபதி பிரதமர் சுகாதார அமைச்சர் ஆகியோரது ஆலோசனையின் ஊடாக நல்லடக்கத்திற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
எமது முஸ்லீம் சமய முறைப்படி நல்லடக்கம் செய்ய அனுமதி தந்த தரப்பினர்களுக்கு எமது சமூகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.