ஜோ பைடனுக்கு வாழ்த்து சொல்லாத சீனா!!
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உலகின் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சீனா, ரஷியா, மெக்சிகோ போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காததுடன், எந்த கருத்தும் கூறவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், அமெரிக்க-சீன உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும், டிரம்பின் தோல்விக்கு மகிழ்ச்சி அடையும் விதத்தில் கூட சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக ஜோ பைடன் அறிவித்துக்கொண்டதை கவனித்தோம். ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்.
“சீனா எப்போது அறிக்கை வெளியிடும்? அல்லது டிரம்பின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்குமா?” என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு வாங் வென்பின், “நாங்கள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றுவோம்” என்று கூறினார்.