ட்ரம்பின் பேரணியால் 30,000 பேருக்கு கொரோனா!! -700 பேர் உயிரிழப்பு-
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் பங்கேற்றவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதுடன், 700 பேர் வரை இறந்துள்ளனர்.
இவ்வாறு கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பொருளாதார வல்லுநர்கள் குழு (Stanford University economists sought) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற பேரணிகளைத் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று நோயாளர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் அபாயத்துக்கு மத்தியில் அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்காணவர்களை கூட்டிப் பேரணி மற்றும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இதன் விளைவுகளை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் நோக்குடன் கலிபோர்னியா - ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் குறித்த ஆய்வை நடத்தியது.
கடந்த ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 ஆம் திகதி வரையான காலத்தில் ட்ரம்ப் நடத்திய 18 பிரசார பேரணிகளை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் தொற்று நோய் மற்றும் இறப்பு என அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.