20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வரவேற்கின்றது
20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வாஞ்சையோடு வரவேற்கின்றது இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் அவர்களின் சமூகம் சார்ந்த பாதுகாப்பு, இருப்பு மற்றும் முன்னேற்றத்திற்கும் அத்துடன் தேசத்தின் எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அரசியல் நெருக்கடியான காலகட்டங்களில் நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி தீர்மானங்களை எடுக்க வேண்டும். அப்படியான ஒரு தீர்மானமாகதான் பாரம்பரிய அரசியல் கோட்பாடுகளில் இருந்து விலகி தேசத்தின் நன்மை கருதியும் பெரும்பான்மை மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்ந்தும்தான் சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளின் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். இதனை சகித்துக்கொள்ள முடியாத ஏனைய சில கட்சிகளும் இனவாதிகளும் மதவாதிகளும் வேறு கண்கொண்டு விமர்சனங்களை மேற்கொண்டு வருவதையிட்டு முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றது.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் நீடித்து நிலைத்திருக்கும் இனவாதத்துடன் இணைந்த அரசியல்தான் இன்று இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகம் இன்று இரண்டு பெரும்பான்மை சமூகங்களின் இருமுனை தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டு வாழ்கின்றது. கடந்த 1100 வருடங்களுக்கு முன் பெரும்பான்மை இனத்துடன் நல்லுறவுடன் வாழ்ந்து வந்துள்ளோம். மீண்டும் நாமும் நமது அரசியல் தலைமைகளும் அந்த உறவினை நோக்கி பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இலங்கை முஸ்லிங்கள் இந்த நாட்டுக்கு ஒரு போதும் துரோகம் செய்யவில்லை. நாட்டைப் பிரித்துக் கோரவுமில்லை. பயங்கரவாத அச்சம் நிலவிய காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும் பக்கபலமாக இருந்து வந்துள்ளார்கள். ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தனித்தனியாக பிரிந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதனை காரணமாகக் கொண்டு சுதந்திரம் வழங்குவதை தாமதப்படுத்தலாம் என்றும் நினைத்தனர்.
ஆனால், டீ.எஸ்.சேனநாயக்கா, பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் ரி.பி.ஜாயா போன்ற தலைவர்கள் தூரநோக்குடன் நாம் இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் செயற்பட்டு சுதந்திரத்தை பெற்றுக் கொண்டனர். இதேபோன்றுதான் 20ஆவது திருத்தச் சட்டத்தை தோற்கடித்து விடலாம் என்று எதிர்க்கட்சிகளும் இனவாதிகளும் எதிர்பார்த்த போதிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து வாக்களித்து தேசத்து மக்களின் நலன் கருதி 20ஆவது திருத்தச் சட்டத்தை வெற்றியடைய செய்துள்ளார்கள் என்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கபூர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.