நாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறியே வாக்களிக்களிக்கவில்லை-எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி
நாங்கள் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியே 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருந்தால் எம்மை ஏன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அக்கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த நிலையில், கட்சியின் எம்.பி.க்கள் நால்வர் அச்சட்ட மூலத்தை ஆதரித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் போன்றோர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து ஹரீஸ் எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்;
"20ஆவது திருத்த சட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான எந்தவொரு அம்சமும் இல்லை. ஏற்கனவே இல்லாத அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கவுமில்லை. 1978ஆம் ஆண்டு ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தையும் விட குறைந்த அதிகாரங்கள்தான் 20ஆவது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறன.
அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அமுலில் இருக்க வேண்டும் என்பது எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கையாகும். அதில் மறைந்த தலைவர் அஷ்ரப் உறுதியாக இருந்திருக்கிறார். தற்போதைய தலைவரும் இது விடயத்தில் உறுதியாகவே இருக்கிறார். கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கு முயற்சிக்கப்பட்டபோது அவர் கடுமையாக எதிர்த்திருந்தார்.
ஆக ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் இச்சட்டத்தின் மூலம் கிடைப்பதில் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பாதகமும் இல்லாத நிலையில் நாங்கள் ஏன் அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். இந்நிலையில் எம்மிடம் அரச உயர் மட்டத்தினரால் ஆதரவு கோரப்பட்டபோது எமது பிராந்திய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாங்கள் வாக்களிப்பு தினத்தன்று நாடாளுமன்றத்தில் வைத்து எமது நாடாளுமன்றக் குழு கூடி தலைவருடன் பேசினோம். அவர் மனச்சாட்சிப்படி வாக்களிப்பதற்கு எமக்கு அனுமதி தந்தார். அதன்படியே நாங்கள் ஆதரவாக வாக்களித்தோம் என்பதை நான் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறான நிலையில் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது உண்மைக்குப் புறம்பான விடயமாகும். நாங்கள் ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் தலைவருக்கு சங்கடம் ஏற்பட்டிருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை தெளிவுபடுத்துவதற்காக கூட்டணியின் அங்கத்துவ கட்சி என்ற ரீதியில் கடிதம் அனுப்பவே வெள்ளிக்கிழமை இரவு செயலாளர் நிஸாம் காரியப்பரின் பிரசன்னத்துடன் தலைவர் வீட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானித்தோம். ஆனால் செயலாளர் ஊடகங்களுக்கு பிழையான விடயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அது போன்றே 20ஆவது திருத்த சட்ட விடயத்தில் மு.கா.தலைவர் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டார் என்று அவரே தெரிவித்ததாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அப்படி சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் இது விடயத்தில் தலைவர் சங்கடப்பட்டிருப்பார் என்பதை நான் மறுக்கவில்லை.
எவ்வாறாயினும் நான் மீண்டும் தைரியமாக சொல்கிறேன், மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று தலைவர் கூறிய அனுமதியுடனேயே நாம் ஆதரவாக வாக்களித்தோம் என்பதையும் கட்சித் தலைமைத்துவத்தின் தீர்மானத்தையோ கட்டுக்கோப்பையோ மீறவில்லை என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறியே வாக்களித்தோம் என்றால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தயாணி கமகேயையும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து அரவிந்த குமாரையும் நீக்கியிருப்பது போன்று எமது முஸ்லிம் காங்கிரஸ் யாப்பின்படி ஏன் எம்மை கட்சியில் இருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் கேட்க விரும்புகின்றேன். எனவே இதில் இருந்து உண்மையான விடயம் என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும்" என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.