SuperTopAds

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை  எங்கு  அமுல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் மிக விரைவில் அறிவிப்போம்

ஆசிரியர் - Editor IV
பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை  எங்கு  அமுல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் மிக விரைவில் அறிவிப்போம்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை,மட்டக்களப்பு,கல்முனை பிரதேசத்தில்   பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை  எங்கு  அமுல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் மிக விரைவில் அறிவிப்போம் என  கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(24) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் மட்டக்களப்பு, திருகோணமலை,பொத்துவில், கல்முனை   போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அம்பாறை கல்முனை பிராந்தியத்தில்  தற்போது 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய தகவல்களின் படி மட்டக்களப்பு வாழைச்சேனையில்  11, நிந்தவூர் -1, பொத்துவில் -5 ,கல்முனை - 3 ,திருகோணமலை - 6, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்துவதற்கும் இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்   திருமண வைபவங்கள்,கூட்டங்கள், விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

பொது நூலகங்கள் பூட்டப்படுவதுடன் கடற்கரை, சிறுவர் பூங்காக்கள், மைதானங்கள், கடைத் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கை கழுவும் வசதி செய்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன் இவர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின் பொதுமக்கள் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம்  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே வேளை அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை .இன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.பொதுமக்கள் அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.இதற்காக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு வைத்தியசாலை, கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை மற்றும் அம்பாறையில் பதியத்தலாவ வைத்தியசாலை ஆகியன கொவிட் 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தமைக்கு அமைய மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே மேற்படி வைத்தியசாலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கரடியனாறு கொவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு நேற்று 42பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையால் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலை வசதிகள் அதிகமாக தேவைப்படுகின்றன.

இதற்கமைய நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்து வைத்தியசாலைகளைத் தெரிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றார்.