அரசின் வர்ததமானி அறிவிப்பைத் தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறை இறுக்கம்
சுகாதார அமைச்சின் புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானதையடுத்து முகக்கவசம் அணிவதிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதிலும் கிழக்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் இன்று(19) காலை சகல தரப்பு மக்களும் முகக்கவசம் அணிந்து வெளியில் நடமாடியதையும் நாவிதன்வெளி பிரதேச செயலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் அவதானிக்க முடிந்தது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் அலுவலகத்திற்கு வருகின்றவர்களுக்கு முகக்கவசம் அணிதல் ,சமூக இடைவெளி ,கைகழுவுதல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்திற்கு சேவைக்காக வருகின்றவர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருவதுடன் இப்பணியில் பட்டதாரி பயிலுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா கிருமித் தொற்றை துடைத்தொழிக்க இன்னும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள சூழ்நிலையில் இலங்கையில் ஏற்பட்டு வரும் மீள் பரவல் அபாயத்தை தடுக்க உயிர் காக்கும் கவசமாக முகக் கவசத்திற்கு முக்கியத்துவம் அளித்து முகக் கவசம் அணிவது கட்டாயமானதாகும் என அரச திணைக்களங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.