4ஆவது தடவையாக அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்
3 பெண் குழந்தைகளை ஒரே சூலில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியைச்சேர்ந்த பெண்மணியொருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(16) பிற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
31 வயதுடைய மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதையடுத்து 13.10.2020 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலை அனுமதிக்கப்பட்டார்.பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக 15.10.2020 அன்று கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.தொடர்ந்து 16.10.2020 பிற்பகல் அங்கு அறுவை சத்திரசிகிச்சை மூலம் 3 பெண் குழந்தைகள் பெறப்பட்டதுடன் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச் சத்திர சிகிச்சையை வைத்தியர் எம்.கே தௌபிக் மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 பெண் குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.பெண்ணின் கணவர் கடற்தொழிலாளி என்பதுடன் ஏற்கனவே இத்தம்பதியினருக்கு பெண் ஆண் என இரு குழந்தைகள் உள்ளன.
மேலும் இவ்வைத்தியசாலையில் இவ்வாண்டில் கிடைக்ப்பெற்ற ஒரே சூலில் பெறப்பட்ட 3 குழந்தைகள் நிகழ்வு 4 வது சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த சில தினங்களாக ஹொரொனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.