SuperTopAds

நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்ட பின்னர் பயணிக்க அனுமதி

ஆசிரியர் - Editor IV
நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்ட பின்னர் பயணிக்க அனுமதி

கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக நாவிதன்வெளி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று(12) முற்பகல் முதல் அம்பாரை மாவட்டம்   கல்முனை பிரதேசத்திலிருந்து  நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் வைத்து தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே நாவிதன்வெளி நோக்கி பயணிக்க  இன்று அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன் நாவிதன்வெளி பிரதேச  செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில்  தொற்று நீக்கும் மருந்து தெளிக்கப்பட்டது.

இச்செயற்பாட்டினை  நாவிதன்வெளி பிரதேச சபை  தவிசாளர்   அமரதாஸ ஆனந்த மற்றும் உப தவிசாளர்   ஏ.கே அப்துல் சமட்  தலைமையிலான  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்   மு.இ.மு.ஜகான் உறுப்பினர்களான ஏ.பி சுபைதீன்    தி. யோகநாயகன்  உள்ளடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

மேலும் இச்செயற்பாடானது   இராணுவத்தின் உதவியுடன்   கல்முனை பிரதேசத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் நிறுத்தப்பட்டு  முற்றாக நுண்ணுயிர் தொற்று நீக்கும் மருந்து தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே பயணிக்க  அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.