ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைதானார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான நபர் புகைப்படங்களை எடுப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு ட்ரோன் கமராவினை மீட்டதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 33 வயதுடைய நபரையும் கைது செய்து திருக்கொவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த ட்ரோன் கமரா இயங்கு நிலையில் காணப்பட்டதுடன் அதன் கட்டுப்பாட்டு தொகுதி இன்னும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற நிலையில் ட்ரோன் கமரா தொடர்பில் கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.உயர்பாதுகாப்பு வலயங்களில் குறித்த கமரா இயக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ட்ரோன் கமராக்களையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.