வீட்டிலிருந்த இரு மாணவிகளை காணவில்லை..! 3 நாட்களாக தேடி அலையும் பெற்றோர், பொலிஸார் அசமந்தம் என குற்றச்சாட்டு..
உயர்தர வகுப்பு மாணவிகள் இருவர் காணாமல்போயுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்வதாக மாணவிகளின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியா - சாஸ்த்திரி கூழாங்குளத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் வீட்டில் வவுனியா - சுதந்திரபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கியிருந்து
கல்வி கற்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வீட்டிலிருந்தவர்கள் வேலைக்கு சென்றிருந்த நிலையில் உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பெறவருமாறு ஒரு மாணவியின் பெற்றோருக்கு
பாடசாலையில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதனை வீட்டிலிருந்த மாணவிகளுக்கு தொியப்படுத்துவதற்காக அவர்களின் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தபோது
அழைப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து அயலவர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து குறித்த மாணவிகளை பார்க்குமாறு கூறிய நிலையில் அயலவர் வீட்டுக்கு சென்றபோது மாணவிகளை காணவில்லை.
இதனையடுத்து மாணவியின் பெற்றோருக்கு விடயத்தை தொியப்படுத்திய பின் பெற்றோர் வந்து தேடியும் மாணவிகள் கிடைக்கவில்லை. இதன்பின்னர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில்
பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை செய்தபோதும்
பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டு பிரதியை பொலிஸார் வழங்கவில்லை எனவும், பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாகவும் பெற்றோர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.