சுனாமியில் காணாமல் போன மகன் விடயம்-திருப்புமுனையுடன் நீதிமன்றத்திற்கு செல்கின்றது
அரச வேலை ஒன்றினை பெற்றுத்தருவதாகவே கூறி பேரனை அழைத்துச்சென்று தனது மகன் என உரிமை கொண்டாடுவதாக வளர்ப்புத்தாயின் அம்மா (வயது 64) குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த தாய் என்ற செய்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைக்காக முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
.பிரஸ்தாப பெண்ணிற்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று நினைக்கின்றேன்.எங்களிடம் வந்த அவர் எனது மகனை போன்று சிகான் இருப்பதாக பசப்பு வார்த்தைகளை கூறி அவருக்கு அரச வேலை ஒன்றினை பெற்று தருவதாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.இதற்கமைய நாங்களும் சம்மதித்து அவருடன் எனது பேரனை அனுப்பி வைத்தோம்.அரசாங்க வேலை என்ற ஆசையில் மட்டுமே இதனை செய்தோம். ஆனால் அங்கு நடந்தது என்ன.ஊடகங்களை அழைத்து பிரஸ்தாப பெண் எனது பேரனை தனது மகன் என கூறி சுனாமியில் காணாமல் போனவர் கிடைத்து விட்டார் என தெரிவித்துள்ளார்.எங்களுக்கு இந்த நேர்காணல் காணொளியை பார்க்கின்ற போது கோபம் வந்தது.எங்களது வீட்டை சுற்றி உள்ளவர்கள் பேரனின் நண்பர்கள் ஆவேசப்பட்டனர்.நாங்கள் தற்போது அவர்களை ஆறுதல் படுத்திவிட்டு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளோம்.முதற்கட்டமாக இது சம்பந்தமாக அனைத்து எழுத்து ஆவணங்களை ஆதாரமாக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளோம்.எமக்கு எங்கள் பேரன் கிடைப்பான் என்ற நம்பிக்கை உள்ளது.காரணம் தற்போது டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவரும் என குறிப்பிட்டார்.
இதே வேளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் குறித்த வழங்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.பொறுப்பதிகாரி தனது கருத்தில் தெரிவித்ததாவது இரு தரப்பினரின் நியாயங்களும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருப்பினும் மகன் யாரின் பிள்ளை என்பதை அறிவதற்கு விசாரணைகளை நடாத்தி வருகின்றோம்.அத்துடன் சகல ஆவணங்களும் தற்போது கட்டம் கட்டமாக பரிசிலனை செய்யப்படுகின்றது.எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து டி.என்.ஏ (மரபணுபரிசோதனை) பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தீர்க்கப்படும் என்றார்.
இன்று (1) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்பு தாய் என்று சொல்லப்படும் பெண்ணும் உரிமை கோரிய பெண்ணும் சமூகமளித்திருந்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முரண்பட்டுக்கொண்டனர்.
சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் முயற்சியை கைவிடாது நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக குறிப்பிட்டார்.