அஷ்ரப் விட்டுச்சென்ற கொள்கையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது
அஷ்ரப் என்பவர் விட்டுச்சென்ற கொள்கையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது என முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அன்பு முஹைதீன் றோஷன் அக்தர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (29 ) 2.30 மணி முதல் 6 .30 மணிவரை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபை ஆரம்ப நிகழ்வாக சமய ஆராதனை இடம்பெற்ற நிலையில் 26.08.2020 அன்று இடம்பெற்ற கூட்டறிக்கையை அங்கீகரித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முதல்வரின் உரையும் இடம்பெற்றது.தொடர்ந்து நிலையியற்குழுக் கூட்டத் தீர்மானங்களை அங்கீகரித்தல் விடயமாக ஆராயப்பட்டது.அத்துடன் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் 20 ஆவது மறைவு தினத்தை நினைவு கூறும் முகமாக அவர் பற்றி கூறும் தனி நபர் பிரேரணையை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அன்பு முஹைதீன் றோஷன் அக்தரினால் கொண்டு வரப்பட்டு அஷ்ரப் விட்டுச்சென்ற கொள்கையில் இன்று மக்களை வழிநடாத்தும் பொறுப்பு அனைவரிடமும் உள்ளதாக சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனை தொடர்ந்து ஏனைய மாநகர சபை உறுப்பினர்களும் அவர் குறித்த நினைவுகளை தெரிவித்திருந்தனர்.
இந்த நினைவு உரையில் பல உறுப்பினர்களும் அனைவரும் கட்சிபேதம் இன்றி பயணிக்க வேண்டும்.அஷ்ரப் என்பவர் விட்டுச்சென்ற கொள்கையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தனர்.
அத்துடன் புதிதாக கல்முனை மாநகர சபை உறுப்பினராக பதவியேற்ற சட்டத்தரணி என்.ஏ.எம். அஸாமின் கன்னியுரை சபையில் இடம்பெற்றது.இவர் கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல்வரின் ஏனைய அறிவிப்பகளுடன் சபை அமர்வு நிறைவடைந்தது.