சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த தாய்
16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன்.இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹூ நன்றி தெரிவிக்கின்றேன் என சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் கடந்த 2014.12.26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் தனது 5 வயது மகனை இழந்து மனநோயாளியாக தினமும் வாழ்ந்து வந்த நிலையில் தனது அதீத முயற்சியினால் கண்டுபிடித்திருந்த நிலையில் பொதுமக்கள் தற்போது அவரது வீட்டிற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊடகங்களிற்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற வேளை கடமைக்காக வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி கொண்டிருந்தேன். சம்பவத்தை அறிந்து எனது வீட்டிற்கு சென்று பார்த்தேன். எனது 5 வயதான மகனை காணவில்லை.எங்கும் அழுகுரல் கேட்ட வண்ணம் இருந்தது.நானும் அழுது அழுது எனது மகனை தேடிச் சென்றேன்.கிடைக்கவில்லை.
பின்னர் அம்பாறை வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறியதை அடுத்து அங்கு சென்று நோயாளிகள் வரவு புத்தகத்தில் மகனின் பெயரை தேடி கண்டுபிடித்தேன். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது.காரணம் மகனை பெற்றோர் என கூறி யாரோ அழைத்து சென்றிருந்தனர்.
அதனை அறிந்து கதறி அழுதேன்.வைத்தியசாலையில் இருந்தவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.ஆனாலும் மகன் உயிருடன் தான் இருக்கின்றார் என அறிந்து அவரை தேடும் முயற்சியில் இறங்கினேன்.இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முதற்கட்டமாக முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தேன்.அடுத்து கல்முனை பகுதியில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று தகவல்களை வழங்கி இருந்தேன்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளவில்லை என கூற விரும்புகின்றேன்.
எனது முயற்சியை கைவிடாது அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில் மகனை தேடி அலைந்தேன்.மிகுந்த நம்பிக்கையுடன் எனது மகனின் சிறுபாராய புகைப்படத்தை தேடி எடுத்து மனநோயாளி போன்று தெரிந்தவர்கள் முதல் தெரியாதவர்கள் வரை கேட்டறிந்து மகன் இருக்கும் பாடசாலையை கண்டறிந்தேன்.
சிங்கள பாடசாலை ஒன்றில் நான் பெயரிட்ட மகன் அதே பெயருடன் அப்பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.அங்கு அதிபரை அணுகி இரகசியமாக எனது மகனின் விடயத்தை அவரிடம் தெரிவித்தேன்.ஆனால் அவர் என்னை அவமதித்து வெளியேற்றினார்.
எனது மகனை வளர்த்து வந்தவர்களுக்கு விடயம் தெரிய வந்தது.இருந்தாலும் எனது முயற்சினை கைவிடாது பொருள் வியாபாரி மற்றும் ஆடை வியாபாரி போன்று வேடமிட்டு மகன் வளர்க்கப்பட்டு வந்த வீட்டினை அடையாளப்படுத்தி கொண்டேன்.இருந்த போதிலும் மகனை அடைந்து கொள்ள பல்வேறு மட்டங்களை சந்தித்து உதவிகளை கேட்டேன்.ஜனாதிபதி செயலகத்திற்கும் கூட கடிதம் ஒன்றினை எழுதி இருந்தேன்.
இருந்தும் பதில் எதுவும் கிடைக்கவில்லை.உடனடியாக எனது மகனை சென்று பார்வையிட்டு நான் தான் தாய் என்னுடன் வருகின்றாயா என வளர்த்தவரின் வீட்டிற்கு சென்று மகனிடம் கேட்டேன்.உடனே மகன் என்னுடன் வர சம்மதித்தார்.உடனே எனது வீட்டிற்கு கூட்டி வந்தேன்.சந்தோசமாக இருக்கின்றேன்.அல்லாஹ் என்னை கைவிடவில்லை.எனது மகனை 16 வருடங்களுக்கு பின்னர் அடைந்து விட்டேன்.இன்று எனது மகன் ஹிந்தி நடிகர் போன்று வளர்ந்திருக்கின்றார் என 5 வயதில் காணாமல் சென்ற றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான்(வயது-21) என்பவரின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
இவ்வாறு கூறி முடிந்த பின்னர் தனது மகனை வளர்த்தவர்கள் எப்போது எந்த நேரமும் மகனை சந்தித்து பார்ப்பதற்கு வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்ய போவதில்லை என மேலும் குறிப்பிட்டார்.