கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் மரத்துடன் மோதி கோர விபத்து..!
வில்லுத்தகடு உடைந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் கிளிநொச்சி மத்திய கல்லுாரியின் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு கல்லுடன் பயணித்த ரிப்பர் வாகனத்தின் வில்லுத்தகடு உடைத்ததில்
குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது குறித்த ரிப்பர் வாகனம் பயணித்த திசையைவிட்டு வீதியின் மற்றைய திசைக்கு சென்று மரமொன்றுடன் மோதியது. இதன்போது மரம் முறிந்து விழுந்துள்ளது. விபத்து சம்பவத்தின்போது எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாடசாலை மாணவர்கள் பேருந்துக்காகவும், பெற்றோருக்காகவும் காத்திருக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் சந்தர்ப்பங்களில் கனரக வாகனங்களின் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இரணைமடு சந்திமுதல் கரடிபோக்கு சந்திவரை ஏ9 வீதியை அண்மித்து
3 பிரதான பாடசாலைகள் காணப்படுகின்றன. அப்பாடசாலைகளிற்கு மாணவர் தொகை அதிகம் என்பதாலும், குறித்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன் கனரக வாகனங்களின் பயணங்களும் அதிகமாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.