தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில்
தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் எனவும் திலீபன் தினைவு நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற திலீபன் நினைவு தினம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமர் தமிழர்களுக்கு அநீதி இழைக்க மாட்டோம் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.உண்மையில் இவர்களின் இக்கூற்றுகள் வரவேற்கப்படவேண்டியவையாகும்.
இவர்கள் இதே போன்று இலங்கையில் ஒரு நீதி ஒரு சட்டம் என வலியுறுத்தி வருகின்றனர்.இதனடிப்படையில் வட கிழக்கு தமிழர்களின் மனநிலையினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.எமது சுதந்திரத்திற்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டு மறைந்த மாமனிதர் திலீபன் ஆவார்.தியாகியாகிய தீலீபன் பயங்கரவாதியாகவோ
அல்லது ஆயுததாரியாகவோ இல்லாமல் சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்தவராவார்.தமிழ்ர்களின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் இவரின் நினைவு தினத்தை தமிழர்கள் வாழும் இடங்களில் அனுஸ்டித்து வருகின்றார்கள்.ஆனால் இப்போதைய அரசாங்கம் இந்நினைவு நிகழ்வை மேற்கொள்ள தடை விதித்துள்ளது.இது அடக்குமுறை சர்வதிகார போக்கு என்பவற்றை காட்டுகின்றது.இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பல கடிதங்களை ஜனாதிபதி பிரதமருக்கு அனுப்பி இருக்கின்றது.எனவே எனது வேண்டுகோள் யாதெனில் நாட்டில் சட்டம் நீதி எல்லோருக்கும் சமனாயின் இந்நிகழ்விற்கு அனுமதி தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இந்நாட்டிற்காக போராடிய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள முடிந்தால் அது உங்களது உரிமை ஆயுதம் ஏந்தாது அகிம்சை ரீதியாக போராடி இறந்த திலீபனை நினைவு கூறுவது என்பது எங்களது உரிமை.எங்களது இவ்விடயத்தை புறக்கணிக்காது தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.இந்நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள்.உங்களோடு சேர்ந்து வாழ விரும்பும் தமிழர்களின் உரிமை விடயத்தில் சர்வதிகார போக்குடன் நடந்து கொள்ளாது.அனுமதி வழங்கப்பட்டால் சட்டதிட்டத்திற்கு அமைய இந்நிகழ்வினை எம்மால் நிறைவேற்ற முடியும் என கூற விரும்புகின்றேன் என கூறினார்.