கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த நடவடிக்கை கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின்படி பாவனையில் உள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதுடன் புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு அடிப்படை பதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த செயற்திட்டத்தின் முதல்கட்டமாக கல்முனை நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட இருப்பதுடன் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பதிவு நடவடிக்கையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு துண்டுப்பிரசுரம் வாயிலாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் கொரோனா அனர்த்தங்களினால் இடைநிறுத்தப்பட்டிருந்த இச்செயற்பாடு கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.