SuperTopAds

”நியூ டைமன்ட்” கப்பல் விபத்தில் சிக்கியதா..? குற்றச் செயல்கள் நடந்ததா..? பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இலங்கை, குற்றவியல் விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
”நியூ டைமன்ட்” கப்பல் விபத்தில் சிக்கியதா..? குற்றச் செயல்கள் நடந்ததா..? பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இலங்கை, குற்றவியல் விசாரணை ஆரம்பம்..

இலங்கை கடல் எல்லைக்குள் சங்கமன்கண்டி பகுதியில் தீ விபத்துக்குள்ளானதாக அறியப்படும் “நியூ டைமன்” கப்பலில் விபத்து இடம்பெற்றதா? அல்லது குற்றங்கள் நிகழ்ந்ததா? என்பதை ஆராய குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இதனை கொழும்பு பிரதான நீதிவானுக்கு, சி.ஐ.டி. (குற்றப் புலனாய்வுத் திணைக்களம்) சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஊடாக விஷேட அறிக்கையினையும் சமர்ப்பித்து அறிவித்தது.

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயம் பிரகாரம், விசாரணை அதிகாரம் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அமர்சிங்க தலைமையிலான சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், 

அவர்கள் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார். 

இந் நிலையில், இத்தகைய விசாரணை ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பில் விசாரணைகளுக்கான உத்தரவுகளை வழங்க, குற்றவியல் சட்டத்தின் 128 ( 3) ஆம் அத்தியாயம் பிரகாரம் கொழும்பு பிரதான நீதிவானுக்கு அதிகாரம் உள்ளதாக 

தீர்மானித்த பிராதான நீதிவான் லங்கா ஜயரத்ன, கப்பலின் வி.டி.ஆர். பதிவுகளை பெறவும், கனிய எண்ணெய் மாதிரிகளை சேகரிக்கவும், கப்பல் கப்டன் உள்ளிட்ட ஊழியர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யவும் 

தேவையான நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்த விவகாரம் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் பரிசீலனைக்கு வந்தது. இதன்போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சமுத்திரவியல் விவகாரங்கள் தொடர்பில் 

நிபுணத்துவம் மிக்க சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்றூ, சிரேஷ்ட அரச சட்டவாதி ரஸ்மி ராசிக், அரச சட்டவாதிகளான அகில அமுனுகம, திவங்க ஆட்டிகல ஆகியோருடன் 

மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இவ்விசாரணைகள் தொடர்பில் மன்றில் விளக்கமளித்தார். அத்துடன் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்றூ, 

கொழும்பு பிரதான நீதிவானுக்கு இது சார்ந்த வழக்கு விசாரணைகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க உள்ள அதிகாரம் தொடர்பில் விளக்கினார். இதன்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி கஹந்தபுர, 

அதன் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார ஆகியோரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். இதனைவிட சி.ஐ.டி. சார்பில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், 

அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மிஹிந்து அபேசிங்க, பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார ஆகியோரும் மன்றில் ஆஜராகினர். வழக்கு தொடர்பில் பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 

பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிமன்றுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினார்.அதன்படி சுருக்கமாக வருமாறு:' இந்த கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவின் துறைமுகமொன்றுக்கு கனிய எண்ணெய் எடுத்து செல்லும்போது 

கடந்த 3 ஆம் திகதி காலை தீ அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவே தெரியவந்துள்ளது. இந்த வணிக கப்பலில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டொன் கனிய எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே 

இந்த தீ பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது. அதாவது 270 மில்லியன் கிலோ கனிய எண்ணெய் அக்கப்பலில் இருந்துள்ளது. இதனைவிட கப்பலின் எரிபொருள் தேவைக்காக 1700 மெட்ரிக் டொன் எரிபொருளும் இருந்துள்ளது. 

இக்கப்பல் பானம, சங்கமன்கண்டியிருந்து 38 கடல் மைல் தூரத்திலேயே இந்த தீ பரவல் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளது. இது தொடர்பில் எமது கடற்படையினருக்கு தகவல் கிடைத்தும் அவர்கள் ஸ்தலத்துக்கு விரைந்து 

விமானப்படை உள்ளிட்டவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினர். இந்திய படையினதும் உதவியுடன் கடந்த 6 ஆம் திகதி தீ முற்றாக அணைக்கப்பட்டது. 

எனினும் மீள 7 ஆம் திகதி தீ பரவல் ஆரம்பித்த நிலையில் 8 ஆம் திகதி அது அணைக்கப்பட்டு தற்போது அக்கப்பலில் எந்த தீ பரவல்களும் இல்லை. இந்த கப்பலானது 333 மீற்றர் நீளமானது. 60 மீற்றர் அகலமானது. 

அக்கப்பலின் நீருக்கு அடியில் உள்ள பாகம் சுமார் 5 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றின் அளவிருக்கும். தற்போது இந்த கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதாவது கிழக்கு கடலில் அக்கப்பல் தீ பரவலுக்கு உள்ளான பகுதியில் சுமார் 2 முதல் 3 சென்றி மீட்டர்கள் வரை கனமான எண்னெய் படிவுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. 

அவற்றின் மாதிரிகளை கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.இந்த கப்பலானது பழைய கப்பல் அல்ல. நவீன வசதிகள் கொண்ட வணிக கப்பலே. 

அதில் தீ பரவும் போது அதனை அணைப்பதற்கான மிக நவீன வசதிகள் உள்ளன. எனினும் இந்த தீ பரவிய போது, அந்த தீயை கட்டுப்படுத்த அல்லது அணைக்க அந்த வசதிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

அத்துடன் சமுத்திர அனர்த்தங்களின் போது, தகவல் அளிக்கும் நவீன வசதிகளும் அக்கப்பலில் உள்ள போதும், தீ அனர்த்தம் தொடர்பிலான தகவல் அந்த கப்பலில் இருந்து முதலில் கிடைக்கவில்லை. 

அவ்வாறு அக்கப்பலில் இருந்து தகவல் அளிக்கப்படாத நிலையில், அப்பகுதியால் சென்ற மற்றொரு வணிகக் கப்பலின் தகவல்களுக்கு அமையவே கடற்படை தீ பரவல் கப்பலை அண்மித்தது. 

கடற்படையினர் அங்கு செல்லும் போது, கப்பலின் ஊழியர்கள், உயிர் காக்கும் படகில் ஏறி, குறித்த வணிகக் கப்பலை கைவிட்டு செல்ல தயாக இருந்தனர். உயிர் காக்கும் படகிலும் தகவல் அளிக்கும் நவீன வசதிகள் தீயணைப்பு வசதிகள் இருந்தபோதும் 

அவை எதுவும், தீயணைப்புக்கு அக்கப்பலின் ஊழியர்களால் பயன்படுத்தப்படவோ அல்லது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவோ இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

இந் நிலையில் இக்கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் பல கிலோ மீற்றர்களுக்கு படர்ந்துள்ளது. இதனால் டொல்பின் ரக மீன்கள், ஆமை வகைகள், கடல் சார் பறவைகள் என பல உயிரிழங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காடுகள் ஊடாக மட்டும் ஒட்சிசன் உற்பத்தியாவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். எனினும் 50 வீதமான ஒட்சிசன் கடல் ஊடாகவே உற்பத்தியாகின்றன. 

இவ்வாறான மாசு படுதல்கள் ஊடாக ஒட்சிசன் உற்பத்திக்கும் அது பெரும் தடையாக அமையும். எனவே இந்த விடயத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், குறிப்பாக கடல் சார் சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் 

விஷேட குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூ டயமன்ட் கப்பல் அனர்த்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்ததா, அங்கு வேறு குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என இவ்விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. 

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் 25,26,38 மற்றும் 53 ஆம் அத்தியாய்ங்களின் கீழ் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்று இங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

எனவே தற்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கிழக்கு கடலில் இருந்து சேகரித்துள்ள எண்ணெய் படிமங்கள் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பட்டுள்ளன. 

அந்த படிமங்கள், தீ பிடித்து எரிந்த கப்பலில் உள்ள கனிய எண்ணெய் தானா என்பதை உறுதி செய்ய, அக்கப்பல் களஞ்சியத்தில் உள்ள கனிய எண்ணெயின் மாதிரிகளைப் பெற்று இரசாயன பகுப்பாய்வுகள் செய்யப்படல் வேண்டும். 

எனவே அதற்குரிய உத்தரவொன்றினை , குறித்த கப்பல் நிறுவனத்தின் இலங்கை முகவரான ஜி.ஏ.சி. சிப்பிங் லிமிடட் நிறுவனத்துக்கு பிறப்பிக்குமாறு கோருகின்றோம். 

அத்துடன் அந் நடவடிக்கைகளுக்கு சி.ஐ.டி. மற்றும் கடல் சூழல் சார் பாதுகாப்பு அதிகார சபைக்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க கடற்படை தளபதிக்கும், 

தற்போது அக்கப்பலில் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனத்தின் இலங்கை முகவருக்கும் உத்தரவிட வேண்டும்.அதே போல், இக்கப்பலின் கப்டன் உள்ளிட்ட 23 பேர் தற்போது, 

காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடற்படையின் பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் வாக்கு மூலம் பெறவும் உத்தர்வு தர வேண்டும். 


இதற்கான வசதிகளை செய்துகொடுக்க குறித்த கப்பல் கம்பனியின் இலங்கை முகவருக்கு உத்தரவிடவும். அதே போல் ஒரு விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஒத்த ஒரு உபகரணமே வி.டி.ஆர். எனப்படும் கப்பல் பயண தகவல் பதிவு இயந்திரம் 

அதன் தகவல்களின் பிரதியொன்றினை விசாரணைக்காக சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்க கப்பல் நிறுவனத்தின் இலங்கை முகவருக்கு உத்தரவிட வேண்டும். ' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோரினார். 

இதனையடுத்து, 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் செயற்பட தனக்கு அதிகாரம் உள்ளதா, அது சார்ந்த விசாரணைகளுக்காக உத்தரவுகளை பிறப்பிக்கலாமா, 

38 கடல் மைல்கலுக்கு அப்பால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட அதிகாரம் உள்ளதா போன்ற சட்ட விடயங்களை சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூ தெளிவுபடுத்தினார். 

இதனையடுத்து குற்றவியல் நடை முறை சட்டத்தின் 5 (3) ஆம் அத்தியாயத்தை ஆதாரமாக கொண்டு, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோரிய கோரிக்கைகளுக்கு குற்றவியல் சட்டத்தின் 124 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் 

உத்தரவுகளை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்தார். அத்துடன் குற்றவியல் சட்டத்தின் 128 ( 3) ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளுக்கு உதவ 

கொழும்பு பிரதான நீதிவானுக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் நீதிவான் பதிவு செய்தார். அதன்படி இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க 

உத்தரவிட்ட நீதிவான் வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.