SuperTopAds

பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, கப்பலில் தீ பற்றியதையும், என்னை யாரோ துாக்கி செல்வதையும் உணர்ந்தேன்..! எண்ணை கப்பலின் மாலுமி உருக்கம்..

ஆசிரியர் - Editor IV
பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, கப்பலில் தீ பற்றியதையும், என்னை யாரோ துாக்கி செல்வதையும் உணர்ந்தேன்..! எண்ணை கப்பலின் மாலுமி உருக்கம்..

குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது. பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. கப்பலில் தீ பற்றியதையும், என்னை யாரோ துாக்கி செல்வதையும் உணர்ந்தேன். என “நியூ டைமன்ட்” எண்ணை கப்பலின் மாலுமி எல்மோர் கூறியுள்ளார். 

இலங்கை கடற்படையினால் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணி நேரம் மருத்துவர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் சத்திர சிகிச்சை, அளிக்கப்பட்டு பின்னர் அதிதீவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக எல்மோர் தெரிவித்துள்ளதாவது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்.3ம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் 

வழமைபோல எழுந்தவுடன் உணவைப் பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன். அங்கு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு குளித்தேன்.

குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத் தாக்குவது போன்று உணர்ந்தேன்.கப்பலில் ஒருபகுதி எரிவதைக் கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை. இருந்தும் இன்னும் நான் உயிர் வாழ்கிறேன். 

உண்மையில் இலங்கை மக்கள், இலங்கை கடற்படை, விமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகள் ஏனையோர் என்னைப் பராமரித்த விதம் மிகவும் கவர்ந்தது என்றார்.