காயமடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மாற்றம்
தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மற்றுமொரு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்தவரை புதன்கிழமை(9) இரவு கடற்படையினரின் உதவியுடன் விசேட நோய்க்காவு வண்டி ஒன்றில் கொழும்பில் உள்ள லங்கா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை(3) அன்று பனாமா அரசுக்கு சொந்தமான MT NEW DIAMOND என்ற கப்பல் தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் போது தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உட்பட 18 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் கடற்படை மீட்டிருந்தது.
எனினும் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் கல்முனை வாடி வீட்டு கடற்கரையோரத்திற்கு ஆழ்கடல் பகுதியில் இருந்து கடற்படையினரின் தாக்குதல் படகு ஒன்றின் ஊடாக தீ பற்றிய கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர் பின்னர் டோலர் படகு ஒன்றில் கடற்கரைபகுதிக்கு கடற்படையினரால் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட நபர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கதறியதை அவதானிக்க முடிந்ததுடன் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் குறித்த நபரை பாதுகாப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
மேலும் மீட்கப்பட்ட நபர் சுமார் 57 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் எல்மோர் என்ற பெயரை உடைய பிலிப்பைன்ஸ் நாட்டவர் என தெரிவிக்கப்பட்டது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.