பெரியவர் யார்..? அதிகாரம் யாருக்கு..? என பேச நான் தயாரில்லை. மக்களின் அபிவிருத்திக்காக அனைவருடனும் இணைந்து பயணிப்பேன்..
என் கனவு யாழ் செயற்றிட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி செயற்படுவேன். என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராகப் பதவியேற்ற அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் .மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இன்றைய தினம் (1/9) அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நான் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குகளால் மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பினார்கள்.
அபிவிருத்திக்கும் உரிமைக்காகவும் எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு மேலும் சேவை ஆற்றுவதற்காக யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியையும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியையும் அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ளது.
நான் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கடமைகளை பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு என்னால் மட்டும் முடியாத காரியமாகும்.
சிலர் எனது பதவி தொடர்பில் வியாக்கியானங்களை முன் வைக்கிறார்கள். சிலர் யார் பெரியவர் யாருக்கு அதிகாரம் இருக்கிறது எனவும் தேவையற்ற கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றை நான் பொருட்படுத்தப் போவதில்லை ஜனாதிபதி செயலகத்தால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய எனது மக்கள் பணியை நேர்த்தியாகவும் ஒளிவு மறைவு இன்றியும் ஊழலற்ற அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.