மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்குள் இருக்க முடியாது..! ஈ.பி.டி.பி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்கி அணி, அங்கஜன் அணியுடன் சேரலாம்..
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்ககூடாது என நினைக்கும் வி.மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்குள் இருக்க முடியாது. அவருடைய நிலைப்பாட்டில் இயங்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, அங்கஜன் அணி, விக்னேஸ்வரன் அணி ஆகியவற்றுடன் இணைந்து செயற்படலாம். என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் வானொலி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் பகிஷ்கரிப்பை அறிவித்தோம். பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எமது கட்சிக்குள் இருக்க முடியாது.
எமது அந்த கொள்கையில் யாரும் கைவைக்க முடியாது. அப்படி கைவைக்க முயல்பவர்கள் எமது கட்சிக்குள் இருக்க முடியாது. பூகோள அரசியலில், பேரம் பேசலுக்கான வாய்ப்பை உருவாக்காமல், அவை சாத்தியமில்லையென யாரும் கூறினால் அவர்களிற்கு எமது கட்சிக்குள் இடமில்லை.
ஒரு தேசம் இருநாடு, பூகோள அரசியல் சூழலில் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தவதெல்லாம் எமது கொள்கைகள். அதை விட மாற்று நிலைப்பாட்டை முன்வைப்பவர்கள் தாராளமாக வெளியில் சென்று, தமது கொள்கையுடன் ஒத்தவர்களுடன் சேர்ந்து இயங்கலாம். வெளியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் தரப்பு,
ஈ.பி.டி.பி, அங்கஜன் தரப்பு எல்லாம் அந்த நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து செயற்படலாம் என்றார்.