பாலம் கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்த்தல் பலி..! இரு பிள்ளைகளுடன் அந்தரிக்கும் குடும்பம்..
கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் பாலம் கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு விசுவமடு சந்தியை இணைக்கும் வீதியில்
புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றது. குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பாலத்தின் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலியாளே குறித்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பாலத்தின் கட்டுமான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் கொங்கிரீட் இடுவதற்காக குறித்த குடும்பஸ்தர் பணியில் ஈடுபடு்தப்பட்டுள்ளார்.
இதன்போது மண் சரிந்து விழுந்ததில் கம்பிக்குள் சிக்குண்டு குறித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவத்தில் 1ம் யூனிற் தர்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இராசலிங்கம் சசிதரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், கட்டுமான பணியில் ஈடுபடும் நிறுவனம் பொறுப்புடன் செயற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை இருதய நோய் தாக்கத்தில் உள்ளனதாகவும்,
அவர்களின் குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலையில், குறித்த குடும்பஸ்தரின் இழப்பு பல்வேறு சவால்களை அக்குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, பாதுகாப்பற்ற முறையில் அங்கு வேலைக்க அமர்த்தப்பட்டமையாலேயே குறித்த நபரின் உயிர் காவு கொள்ளப்பட்டதாக உடன் பணி புரிபவர்கள் தெரிவித்துள்ளனர்.