சபையின் நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
கல்முனை மாநகர சபையின் நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் 29 ஆவது சபை அமர்வு சபாமண்டபத்தில் இன்று (26) 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.
சமய ஆராதனை கடந்த 27.07.2020 அன்றைய கூட்டறிக்கையை அங்கீகரித்தல் முதல்வரின் உரை உள்ளிட்ட வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மாநகர சபையின் நடவடிக்கை ஆரம்பமானது.
இதன் போது கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்முனை நகர மண்டபத்திற்கு 'கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் ஞாபகார்த்த மண்டபம்' என பெயர் சூட்டுவதற்காக தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எம் சப்றாஸ் மன்சூரினால் பிரேரணை முன்மொழியப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
மேலும் அதனை தொடர்ந்து மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை கிராமத்தில் கடற்கரையை நோக்கி வெளியூர்களில் இருந்தும் அதிகமான மக்கள்தொகை கூடுவதனை கருத்தில் கொண்டு அம்மக்கள் அவசர நேரங்களில் மலசலம் கழிப்பதற்காக கடும் இடர்பாடுகளை எதிர்நோக்குவதனால் கடற்கரையை அண்டிய பகுதிகளில் பொருத்தமான இடம் கண்டறிந்து கல்முனை மாநகர சபையினால் பொது மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என மாநகர சபை உறுப்பினர் பீ.எம் சிபான் உரையாற்றினார்.
இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்த முதல்வர் சாதகமாக பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
இது தவிர எதிர்காலத்தில் மக்களின் நிலமைகளை கருத்தில் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை மாநகர சபை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர் உரையாற்றினார்.
மேலும் மாநகர சபையின் நிர்வாக கட்டமைப்பில் குறைபாடுகள் காணப்படுவதாக சில உறுப்பினர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் சீர் செய்யப்பட்டு சபை அமர்புகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.